News Update :
Home » » போரின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மீள் எழுச்சிக்கான சவால்கள்

போரின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மீள் எழுச்சிக்கான சவால்கள்

Penulis : anpusanthosh on Sunday, July 14, 2013 | 9:41 AM

எமது சமூகத்தின் சமகாலச் சவால்களும் கல்வியும்
Contemporary Challenges of Our Society and Education
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம், இடப்பெயர்வு, வன்முறை ஆகியவற்றின் கோரப்பிடிக்குள் சிக்குண்டிருந்த நம் சமூகம் தற்போது யுத்தமற்ற ஒரு சூழலுக்குள் பிரவேசித்துள்ளது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்பு எம்மக்கள், தங்களது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர். 


ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்தகாலத்தில் ஏற்பட்ட உயிரழிவுகளும் பௌதிக சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களும் பொருளாதார நட்டங்களும் அரச, அரசசார்பற்ற மற்றும் சர்வதேச நிறுவனங்களாலும் குழுக்களாலும் கணக்கிலெடுக்கப் பட்டுள்ளன. 

பௌதிக வளங்களை மீளக் கட்டமைப்பதற்கும் புதியவசதிகளைக் கட்டுருவாக்குவதற்கும் தேவையான வளங்கள் கணிப்பிடப்பட்டும் சாத்தியமானவை அடையாளங் காணப்பட்டும் நிரலிடப்பட்டுள்ளன. 

துரிதப்படுத்தப்பட்ட மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளினை முன்னெடுப்பதற்கென தேசிய, மாகாண, மாவட்ட, உள்@ராட்சி மற்றும் கிராமிய மட்டத்தில் பல்வேறு செயலணிகள் முனைப்புடன் செயலாற்றுகின்றன. 

இந்நாட்டின் தலைவர் அதிமேதகு சனாதிபதி அவர்கள் யுத்தத்தால் இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர ஏனைய யாவற்றினையும் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் வழிசெய்யும் என உறுதியளித்துள்ளமை எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. 

அத்துடன் வன்முறைக்கும் யுத்தத்திற்கும் ஏதுவான மூலகாரணிகள் கண்டறியப்பட்டு அவற்றினை இல்லாதொழிப்பதற்கும் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தினைக் கட்டியெழுப்புவதற்குமான முயற்சிகள் விரைவில் பலனளிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

எனினும் நீண்டகால யுத்தத்தினுள்ளும் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளுக்குள்ளும் சிக்கித் துயருற்ற மக்களின் இயல்பு வாழ்க்கையினைக் கட்டியெழுப்புவது என்பது இலகுவான ஒரு பணியாக எமக்கு இருக்கமுடியாது. 

யுத்தத்தின் நீட்சியும்; இடப்பெயர்வு வாழ்க்கையும் சமூகக்கட்டமைப்புகள் சிதைந்து போவதற்கும், மனிதவளத்தின் சிறப்புத்திறனும் ஆற்றல்களும் குன்றிப்போவதற்கும் காரணமாகியுள்ளது. 

சமூகத்தினதும் தனிமனிதரதும் தொழிலாண்மையும் உற்பத்தித் திறனும் மூலதனப் பெருக்கமும் வலுவிழந்துள்ளன. அச்சமூகங்கள் கட்டிவளர்த்த சனநாயகப் பயிற்சிகளும், விழுமியங்களும், பெறுமானங்களும் வழக்கொழிந்தும் மறக்கப்பட்டும் போயுள்ளன. 

இத்தகைய பலவீனமான சூழ்நிலைகள் தனிமனித நடத்தைப் பிறழ்வுகளுக்கும் சமூகவிரோத காரணிகளின் ஆக்கிரமிப்புக்கும் வாய்ப்பாகின்றன. 

வடக்கு கிழக்கு மக்களின் மீள் எழுச்சிக்கான சவால்கள்:

எமது நாட்டின் வடக்குக்கிழக்குப் பகுதிகளுக்குள் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினது நேரடியான தாக்கத்தினால் வடக்குக்கிழக்குப் பிரதேசத்தினுள் வாழ்ந்த மக்கள் பாதிப்படைந்து கொண்டிருந்த சமகாலத்தில் நாட்டின் ஏனைய பகுதியிலிருந்தவர்களும் வடக்குக்கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறி வாழ்ந்தோரும் தங்களது இருப்பையும் அபிவிருத்திகளுக்கான வாய்ப்புக்களையும் சிறப்பாகத் தக்கவைத்து மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. 

இது யுத்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கும் ஏனைய மக்களுக்குமிடையில் சமூகப் பொருளாதார நிலைகளில் பல்பரிமாணங்கொண்ட இடைவெளியினை உருவாக்கியுள்ளது. 

இந்த இடைவெளியினைப் பாரியளவிலான முதலீட்டுப் பாய்ச்சல்கள் ஊடாகவோ அல்லது விரைவுபடுத்தப்பட்ட உட்கட்டுமானங்களின் உருவாக்கத்தினாலோ மட்டும் நிரப்பிவிட முடியாது. அத்தகைய ஒற்றை அணுகுமுறை மென்மேலும் முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்வதாகவே அமையும் என்பதை எவரும் மறுக்கமுடியாது. 

சிதைக்கப்பட்ட சமூகப்பாதுகாப்பு வலையமைப்பு:
பன்னெடுங்காலமாகத் தமது பூர்வீகக் குடியிருப்புக் காணிகளில் சமூகக்குழுக்களாக வாழ்ந்துவந்த மக்களைச் சுற்றி, கண்ணுக்கு புலனாகாத சமூகப்பாதுகாப்பு எனும் வேலி இடப்பட்டிருந்தது. 

அதனுடைய நெற்றிக்கண்ணிற்கு குடும்பமுரண்பாடுகள் தொடக்கம் தனிமனித நடத்தைப்பிறழ்வுகள் வரை கட்டுப்பட்டிருந்தது. வறுமையும் துன்பமும் பட்டினியும் மகிழ்ச்சியும் கூட சமூகத்தின் பொதுப்பொருளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 

சாதீயம் தீண்டாமை போன்ற இருண்டபக்கங்களுக்கு அப்பால் தொழிற்றிறனும் சிறப்புத்தேர்ச்சியும் அச்சமூகங்களின் முதுசமாகத் தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்டது. சீட்டுமுறைகளும் பணச்சடங்குகளும் சமூகத்தின் பணச் சுற்றோட்டத்தையும் சேமிப்பாற்றலையும் மூலதனவாக்கத்தையும் தொழிலாக்கத் திறனையும் வளப்படுத்தின. 

முதியோரைக் கனம் பண்ணலும் இளையோருக்கு வழிவிடலும் உறவுக்குக் கைகொடுத்தலும் வாழ்க்கை நெறியாகியது. சமூகத்தின் கூட்டுப்பொறுப்புக் கூறும் கடப்பாடும் நா நயங்காத்தலும் சமூகக் குழுக்களுக்கிடையான முரண்பாடுகளைச் சீர்செய்தன. ஆலயங்களும் ஆண்டு விழாக்களும் குடும்ப நிகழ்வுகளும் கூட்டுவாழ்க்கையின் பெருமையைப் பறைசாற்றின. 

இவையாவும் இன்று தேவதைக்கதைகள் போன்று மாறியுள்ளன. மூன்றுதசாப்தத்திற்குள் இடப்பெயர்வின் பேரால் ஓடிக் களைத்தவர்கள் தரித்து நின்றபோது அவர்கள் தங்கள் அடையாளங்களைத் தொலைத்திருந்தார்கள். 

குடும்பம் என்ற அலகு தனது முகவரியைப் பறிகொடுத்திருந்தது. யுத்தமும் திறந்தவெளி வாழ்க்கையும் பட்டினிச்சுமையும் மானிட சுபாவத்தினைப் பரீட்சித்துப் பார்த்தது. 

அதிர்ச்சி, சோகம், பயம், எதிர்காலம்பற்றிய நம்பிக்கையீனம், பட்டினி, அகதி வாழ்க்கை முதலானவை சமூகப்பெறுமானங்கள் விழுமியங்கள் என்பவை வலுவிழக்கப்படவும் மீறப்படவும் தூண்டுதலளித்தன. 

மொத்தத்தில் சமூகத்தின் கூட்டு வாழ்க்கையும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப்பொறிமுறையும் மிகவும் மோசமாகச் சிதைவுக்குள்ளாகியது. 

வலுவிழந்துள்ள சனநாயக மரபுகளும் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பும்:
இக்காலகட்டத்தில் எமது சமூகத்தின் தலைமைத்துவம் போர்க்கால நெறிமுறைகளை மட்டும் கருத்திற்கொண்டு உருமாற்றப்பட்டது. இயல்பான சனநாயகப் மரபுகளும் பொதுக் கருத்துருவாக்கங்களும், மாற்றுக் கருத்துக்களை விவாதிக்கக்கூடிய தளங்களும் மறுக்கப்பட்டன அல்லது அவசியமற்றுப்போயின. 

இது ஒரு சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்க்கையையும் தனிமனித அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் உத்தரவாதப்படுத்துவதற்கு வேண்டிய சூழலை இல்லாதொழித்தது. 

பெருகியுள்ள தங்கிவாழ்வோர் தொகை: 
நேரடியானதும் மறைமுகமானதுமான யுத்த விளைவுகள் எமது சமூகத்தினதும் குடும்ப அலகுகளினதும் சுமைபாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கியுள்ளது. 

தாய்தந்தையை இழந்தவர்கள், தாரமிழந்தவர்கள், உழைக்கும் வலுவிழந்தவர்கள், நிர்க்கதியான முதியோர், மருத்துவம், உளவியல் சார்ந்த சிறப்புத் தேவைகளுள்ளோர் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. 

இவற்றை விடப் பாடசாலை செல்லாதோர், பாடசாலையை விட்டு இடைவிலகியோர், தொழிற்பயிற்சியற்றோர், முன்னைநாட் போராளிகள், இராணுவ சேவையிலிருந்து வெளியேறுவோர் என மற்றுமோர் மனிதவளத்தொகுதியும் பெருகிக் கொண்டிருக்கின்றது. 

இலங்கையில் வருடாந்தம் அண்ணளவாக 2.8மில்லியன் புதிய தொழிலாளர் படை உருவாகி இணைகின்றது. தற்போதைய புள்ளிவிபரங்கள் 65,000 பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பதாக கூறுகின்றது. 

பொதுவாகப் பௌதிக வளங்களைப் பயன்படுத்தாது வெறுமனே வைத்திருந்தாலும் அவை பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத காலத்தில் தாமாக வினைபுரியவோ எதிர்விளைவுகளை ஏற்படுத்தவோ முயற்சிக்கமாட்டாதென்பது நாமறிந்ததே. 

ஆனால் மனிதவளம் அவ்வாறு செயலற்று இருக்கப்போவதில்லை. மனிதவளம் அணுசக்தியைப் போன்றது. நாம் அதனைச் சாதகமான முறையில் வளப்படுத்தி நெறிப்படுத்தாவிட்டால் அது எமது அரசியல், சமூக பண்பாட்டுத்தளங்களில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். 

இந்நிலையில் தற்போது வடக்குக் கிழக்கில் அதிகரித்துள்ள தங்கிவாழ்வோர் தொகையினைச், சுயசார்புள்ள குடிமக்களாக முழுஆளுமையுடன் உருவாக்குவதற்கான மிகப்பெரிய பொறுப்பு எம்மவரிடம் சுமத்தப்பட்டுள்ளது. 

தொழிற்சந்தைப் போட்டி:
கடந்த மூன்று தசாப்த காலத்தில் இலங்கையின் பொருண்மியக் கட்டமைப்பு உலகமயமாதலுக்கு இசைவாகத் தன்னை மாற்றிக்கொண்டது. உற்பத்திச் சந்தைகள் பல்தேசியக் கம்பனிகளுக்காகவும் தனியார் துறையினருக்காகவும் திறந்துவிடப்பட்டன. 

விவசாயமும் மீன்பிடியும் அரசசேவைத்துறையும் முதன்மையினை இழக்க, அறிவையும் தொழிநுட்பத்தையும் மையப்படுத்தியதாக புதிய தொழில்வாய்ப்புகளுக்கான கதவுகள் தனியார் துறையினரால் திறந்து வைக்கப்பட்டன. 

மொத்த தேசிய உற்பத்தியில் சேவைத்துறை யின் பங்கு 59.5% ஆக உயர்ச்சியடைய கைத்தொழிற்றுறை 28.4% த்தினையும் விவசாயத்துறை 12.1% த்தினையும் கொண்டுள்ளதாக 2009ம் ஆண்டின் மத்தியவங்கி அறிக்கை குறிப்பிடுகின்றது. 

கல்வியும், தொழிற்பயிற்சியும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் தொலைதூரக் கல்வியும் இணைக்கப்பட்ட வளாகங்களும் இலங்கையின் மனித வளத்தினை அறிவுசார்ந்ததாக செழுமையூட்டியன. 

பிராந்திய தேசிய மற்றும் சர்வதேச தொழிற்சந்தையில் இலங்கையின் தொழிற்படை போட்டியிட்டு வெற்றியடையக்கூடியளவிற்கு ஆளுமை கொண்டதாக உருமாறியுள்ளது. ஆனால் இவையாவும் எமது தேசத்தின் வடக்குக் கிழக்கிற்கு வெளியேயுள்ள பகுதிகளில் மட்டுமே சாத்தியமாகியது. 

யுத்தம் மற்றும் யுத்தம்சார்ந்த கொள்கை வரையறைகள் காரணமாகவும் வடக்குக் கிழக்குப் பிரதேங்களில் தனியார் துறையினர் முதலிடத் தயங்கியதாலும் மக்கள் தொடர்ச்சியான தசாப்த காலத்திற்கு மேலாக இடப்பெயர்வு வாழ்க்கைக்குள் நிர்ப்பந்திக்கப்பட்டமையினாலும் மனிதவள மேம்பாடும் அதற்கான வாய்ப்புக்களும் முற்றாக இல்லாமல் போயின. 

கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்புக்களும் முடங்கிச் செயலற்றிருந்தன. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக விரைவுபடுத்தப்பட்ட புனரமைப்புப் பணிகளின் காரணமாக உட்பிரவேசித்துள்ள பாரியளவிலான தனியார்துறை முயற்சிகள் பயிற்றப்பட்டதும் வளப்படுத்தப்பட்டதுமான மனித வளத்திற்கான கேள்வியினைப் பாரியளவில் எழுப்பியுள்ளது. 

போர்ச்சூழலில் வளப்படுத்தலுக்கான வாய்ப்புக்களற்ற நிலையில் மழுங்கிப் போயுள்ள வடக்கு கிழக்கின் பெருந்தொகுதியினரான தொழிற்படையினரால் இன்று அரசதுறையிலும் தனியார் துறையிலும் உருவாக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்களை உரித்தாக்கிக்கொள்வதற்காக, போர்ச்சூழலுக்கு வெளியே வாழ்ந்த மனிதவளத்துடன் போட்டியிட முடியாதுள்ளது. 

எமது பிரதேசத்தின் தொழிற்படையானது உடலுழைப்பை வேண்டிநிற்கும் வினைத்திறனற்ற வாய்ப்புகளுக்குள் முடக்கப்படுவதனால், சமூகம் மீண்டும் முரண்பாட்டுச் சிக்கலுக்குள் பிரவேசிக்கும் அபாய நிலை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. 

சேமிப்பும் மூலதனவாக்கமும்:
இயல்பாகவே சேமிப்பாற்றலினைக் கொண்டிருந்த வடக்குக் கிழக்கின் சமூகம் அதனைப் பிள்ளைகளின் கல்வியாகவும் தங்க ஆபரணங்களாகவும் குடியிருப்புக்காணியுடனான வீடாகவும் சிறிய சொந்தமான தொழின் முயற்சியாகவும் வங்கிகளில் சேமிப்பு வைப்பாகவும் தேக்கிவைத்துக் கொண்டது. 

நடுத்தர மற்றும் பெரிய தொழின் முயற்சிகள் வர்த்தக நடவடிக்கைகளில் அவர்களது சேமிப்பினளவு மிகக்குறைவாகவே காணப்பட்டது. நீண்ட யுத்தமும் அதனோடிணைந்த பொருளாதார மற்றும் போக்குவரத்துத் தடைகளும் யுத்தப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைச் செலவினைப் பன்மடங்குகளாக பெருக்கியதனாலும், ஏதிலிகளாகப் பன்முறை இடம்பெயர்ந்தமையாலும் அவர்களின் சேமிப்புக்கள் யாவும் கரைந்தும் தொலைந்தும் போயின. 

இயல்பு வாழ்கையினைக் கட்டியெழுப்புவதில் உள்ள தடைகள்:
வடக்குக் கிழக்கின் ஒட்டுமொத்தச் சமூகமுமே தமது வாழ்க்கையினை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் உள்ளது. குடியிருப்புக்கள், சமூக உட்கட்டுமான வசதிகள், தொழில்வாய்ப்புகள், என விரியும் முன்னுரிமைப்பட்டியலுடன் விசேட கவனத்திற்குரிய மனித வளத்தொகுதியினரும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவராயுள்ளனர். 

இவையாவற்றுக்கும் மேலாக சமூகத்தில் நீடித்த அமைதியினைக் கட்டியெழுப்புவதும் எதிர்கால அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய காரணிகளை முளையிலேயே கட்டுப்படுத்துவதும் மிகவும் முதன்மையான விடயங்களாகவுள்ளன. 

இதனைப் போர்க்கால அணுகுமுறையூடாகவோ அல்லது வெறுமனே பௌதிக வளங்களையும் வாய்ப்புகளையும் பெருக்குவதன் மூலமோ மட்டும் அடைந்துகொள்ள எம்மால் முடியாது. 

எம்சமூகத்தின் நிகழ்காலத் தலைவர்களே!

இது யாருடைய பணி?:
கடந்த காலத்தில் எமது சமூகம் எதிர்கொண்டிருந்த யுத்தமும் அதன் தொடர்விளைவுகளும் வெளிப்படையானதும் மறைமுகமானதும் [direct and indirect], உடனடியானதும் நீண்டகாலமானதுமான [immediate and longterm] பல்பரிமாணப் [multi-dimentional] பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

இவற்றினை வெறுமனே புள்ளிவிபரங்களின் சட்டகத்தினுள்ளும் அவற்றினடிப்படையில்; கீறப்படும் கோலங்களுக்குள்ளும் எம்மைச் சிறைப்படுத்திக்கொண்டு புரிந்துகொள்ளமுடியாது. 

எமது கொள்கைவகுப்பாளர்களும் [Policy makers], திட்டமிடலாளர்களும் [Planners] நிறைவேற்றாளர்களும் [Executives] மற்றும் பணித்துறை ஆட்சியாளர்களும் [Beaucratics], ஏன் அரசியல் தலைவர்களும் [Political leaders] கூட இந்நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல்கள் கொண்டவர்களே. 

மதிப்பிற்குரிய கல்விமான்களே!
மொன்ரிசோறி கல்வி முறையினை உலகுக்கு அறிமுகப்படுத்திய இத்தாலிய மருத்துவரும் கல்வியியலாளருமான மரியா மொன்ரிசோரி அம்மையார் "யுத்தம் தவிர்ப்பது அரசியல்வாதிகளின் கடமை: சமாதானத்தினைக் கட்டியெழுப்புவது கல்வியின் கடமை." [“Averting war is the work of politicians; establishing peace is the work of education” - Maria Montissori] என்று குறிப்பிட்டுள்ளமையை இங்கு நினைவூட்டுவது மிகப் பொருத்தமானது எனக்கருதுகின்றேன். 

சமூகத்தை யுத்த நிலையிலிருந்து சமாதானத்திற்கு உருமாற்றும் இலக்குடன் மீள் கட்டமைப்பதற்குரிய சர்வவல்லமை கொண்டதும் வியாபித்ததுமான கருவியாகக் கல்வியே உள்ளது. கல்வியை சமாதானத்திற்கான கல்வியாக அன்றி கல்வி தான் சமாதானம் என்றவாறு சிந்திக்கவேண்டும் [“It is necessary to think of education as peace , not education for peace”] என அவர் மிக உறுதியாக நம்பினார். 

கல்வி சமாதானத்தின் வடிவமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் இவ்விடத்தில் சமாதானத்துடன் இணைந்த சுதந்திரம் [freedom] என்பது முக்கியம் பெறுகின்றது. 

வழமையாகச் சுதந்திரம் என்கின்ற எண்ணக்கரு 'அரசியற் சுதந்திரம்' [political freedom] எனப் பொருள் கொள்ளப்பட்டாலும் அதிகாரக் கைமாற்றம், ஆட்சி யதிகாரத்திற்கான உரிமை என்பவற்றுக்கு அப்பாலும் சென்று சுதந்திரம் என்பதனைப் பரந்துபட்ட பண்புசார் தளத்தில் புரிந்துகொள்ள வேண்டியது எமக்கு இன்று அவசியமாகவுள்ளது. 

இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளரும் 1998ல் பொருளியற்றுறைக்காக நோபல் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டவருமான பொருளியலாளர் அமர்த்தியா சென் [Amatya Sen] ‘அபிவிருத்தியே சுதந்திரத்தின் அடிப்படை’ [Development as Freedom] என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளபடி மக்களின் செயலாண்மையினை [Human Agency] வளப்படுத்துவதும் உற்பத்திசக்திகள், இயற்கைவளங்கள் ஆகியவற்றின் மீது அவர்களின் உரித்தாண்மையினை உறுதிசெய்வதுமே சுதந்திரத்தின் பண்புசார் நிலையாகும். 

எமது நாட்டைப் பொறுத்தளவில் கடந்த மூன்று தசாப்த காலத்தினுள் புறநிலை மாற்றங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன. சந்தைக்கட்டமைப்பு உலகின் திறந்த போட்டிச் சந்தையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. 

அரசாங்கம் பொருளாதார, சேவைத்துறைகளுக்குள் கொண்டிருந்த தனியுரிமை கலைக்கப்பட்டு தனியார்துறையின் ஆளுமையும் பங்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. உலகமயமாதலும் தகவற் தொழிநுட்பப் புரட்சியும் மின்னியற் தொழின்நுட்பத்தின் அதீத பிரவேசமும் யுத்தத்தால் பாதிக்கப்படாத ஏனைய பகுதி மாணவர்களுக்கும் இளையோருக்கும் மிகப்பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. 

இவர்கள் தங்களது தொடர் கல்வியினூடாகவும் கிடைத்த வாய்ப்புக்களினூடாகவும் வளப்படுத்தப்பட்ட மனிதவளத் தொகுதியாக மாறியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தொழிற்பயிற்சியும் தயார்ப்படுத்தல் முறைமைகளும் அவர்களின் ஆற்றலினைப் பன்மடங்கு பெருக்கி, அவர்களை முன்னகர்த்தியுள்ளது. 

இத்தகைய பின்புலத்தில் கல்வியின் தொடர்ச்சி இழக்கப்பட்டு, பாடசாலைப்பருவத்தினையும் தாண்டிய நிலையில் வெளியில் நிற்கும் வடக்குக் கிழக்கின் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் செயலாண்மையினை மேம்படுத்தி உரித்தாண்மை உள்ளவர்களாக மாற்றவும், வளப்படுத்தப்பட்ட மனிதவளத்துடன் போட்டியிட்டு வாய்ப்புகளைக் கையகப்படுத்தவும் எம்மால் முடியுமா? என்ற வினாவுக்கு நாம் விடை காண வேண்டியவர்களாக உள்ளோம். 

யுத்ததசாப்தங்களில் சனநாயகப்பயிற்சியும் பங்களிப்பும் மாற்றுக்கருத்துக்களுக்கான மதிப்பும் சகிப்புத் தன்மையும் கூட்டாகப் பொறுப்புகூறும் பண்பும் முற்றாக பெறுமதியற்றிருந்தது. 

அதனை மீண்டும் சிலவிதிமுறைகளின் மூலமும் சட்டவாக்கங்களினூடாகவும் உருவாக்கி விடமுடியாது. இத்தகைய எதிர்மறையான சூழ்நிலைகள் சமூகத்தின் எதிர்கால அமைதியையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்குப் பொருத்தமான தலைமைத்துவப் பண்புகள் கொண்ட எதிர்கால சந்ததி உருவாகுவதற்கு மிகப்பெருந்தடையாக இருக்கும். 

இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட மனிதவளமும் பண்படுத்தப்பட்ட ஆளுமையும் கூட்டான வினைத்திறனும் இன்று எம் சமூகத்தின் முதன்மைத் தேவையாகவுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்குக் கல்வியும் கல்விசார் நிறுவனங்களும் சிந்தனையாளர்களும் சமூகமும் எவ்வாறு செயலாற்றலாம் என்பதே இன்றைய எமது கருப்பொருளாகும். 

கல்வியின் புதிய பரிமாணம்:
யுத்தத்தின்பின்னான சமூக மீள்எழுச்சி என்பது நான்கு தளங்களில் எம் மக்களை நிலைநிறுத்தக்கூடியதாக அமையவேண்டும். 

அ) துரிதமாகத் தங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்பக்கூடிய தொழிலாற்றலை [employable capacity] வழங்குதல். 

ஆ) தம்மோடு ஒத்த ஏனைய மக்களுடன் சமமாகப் போட்டியிட்டு, பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேசப் பரப்புக்களில் தம்மை நிலை நிறுத்தக்கூடிவர்களாக அவர்களது ஆளுமையினைக் கட்டியெழுப்புதல். 

இ) நீடித்த சமாதானத்திற்கு [sustainalble peace] அடித்தளமான சனநாயகப் பயிற்சியையும் [democratics practice] நல்லாட்சிப் பிரயோகத்திற்கான [good governance] அக்கறையையும் - பங்கேற்றல் [participation], வெளிப்படைத்தன்மை [transparency], பொறுப்புச்சொல்லும் கடப்பாடு [accountability], மாற்றுக் கருத்துக்கள் [alternative voices] மீதான சகிப்புணர்வு, ஆகிய பண்புகளையும் பால் மற்றும் வயது வேறுபாடுகள்; இன்றி சகல மட்டங்களிலும் உருவாக்குதல். 

ஈ) தங்களதும்; சகசமூகங்களினதும் எதிர்கால சந்ததியினரதும்; நீடித்த செழிப்புக்கும் உறுதிப்பாட்டிற்கும் வழிசெய்யும் வகையில் இயற்கைவளங்கள், உற்பத்திச்சாதனங்கள், சுற்றுச்சூழல்காரணிகள் ஆகியவற்றை முகாமை செய்யக்கூடிய உரித்தாளுமை கொண்ட சமூகமாக [community with entitlement] உருவாக்குதல். 

இந்நான்கு தளங்களும் வழமையான முறைசார் கல்வியின் [formal education] பரப்பெல்லைக்குள் அடக்கப்பட முடியாதவை. தற்போது நடைமுறையிலுள்ள கல்வித்திட்டமும் பாடவிதானங்களும் [education scheme and curricula] அடிப்படையான கல்வியறிவை [literacy] எல்லோருக்கும் கிடைக்கச்செய்யும் நோக்குடனும் பொருளாதார அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படும் சமூகங்களின் தேவையை நிறைவு செய்வதற்காகவும் தேசியரீதியாக வடிவமைக்கப்பட்டவை. 

சிறப்புத் தேவையுள்ள பிரதேசங்களையோ மக்களையோ [people or regions with special needs] கருத்திற்கொண்டு மாற்றங்களை உள்வாங்கப்படக் கூடியவையாக இவை தயாரிக்கப்படவில்லை. 

இவ்விடத்தில் அமெரிக்க சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பேராசிரியராகவும் தத்துவம் அபிவிருத்தி சமூகவியல் ஆகிய துறைகளில் நன்கு அறியப்பட்ட சிந்தனையாளருமான மார்த்தா நேஸ்பாம் [Martha C.Nussbaum] அம்மையார் அண்மையில் தனது Not for Profit –Why Democracy Needs the Humanities என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதனை தங்கள் கவனத்திற்குத் தர விரும்புகின்றேன். 

“தேசிய வருவாயில் அவாக்கொண்டுள்ள தேசங்கள், சனநாயகத்தின் உயிர்வாழ்வுக்கான அடிப்படைத் திறன்களைத் தமது கல்விமுறைமை கொண்டுள்ளதா என்பதில் அக்கறையற்றவர்களாகவே உள்ளனர். இந்நிலைமை தொடருமாயின் உலகிலுள்ள தேசங்கள் எல்லாம் தங்களின் மேல் அக்கறை கொள்ளக்கூடிய முழுமைகொண்ட குடிமக்களை, சக மனிதனின் துயரங்களையும்; சாதனைகளையும் உணர்ந்து மதிப்பளிக்கக்கூடியவர்களை, உருவாக்குவதற்கு பதிலாக, விரைவில் உற்பத்திக்கு பயன்படக்கூடிய, இயந்திரங்களின் தலைமுறைகளை உருவாக்கிவிடுவார்கள். உலகின் சனநாயகத்தின் எதிர்காலமே நூலிழையில் தொங்குகின்றது.” என்று அவர் அபாயக்குரல் எழுப்புகின்றார். 

[“Thirsty for national profit, nations, and their systems of education, are heedlessly discarding skills that are needed to keep democracies alive. If this trend continues, nations all over the world will soon be producing generations of useful machines, rather than complete citizens who can think for themselves, criticize traditions, and understand the significance of another person’s sufferings and achievements. The future of the world’s democracies hangs in the balance.-Martha C.Nussbaum 2010 –p2]. 

எனது மதிப்புக்குரிய நண்பர்களே பெற்றோர்களே கல்வியாளர்களே!
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்குக் கிழக்கில் எம் மக்களது வாழ்க்கையினையும் அவர்களது பொருண்மியச் செழுமையினையும் பாதுகாப்பான எதிர்காலத்தினையும் கட்டியெழுப்புவதற்கு நாம் கடுமையாக, மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

எமது கடும் உழைப்புடன் அரசாங்கத்தினதும் சர்வதேசங்களினதும்; புலம்பெயர் சமுகத்தினதும் உதவிகளும் பலமும் இணையும் போது நாம் நினைத்தவாறு மீள் எழமுடியும். அவையாவற்றிற்கும் அடிப்படையான மனிதவளத்தை சிறந்த முறையில் கையாண்டு வளப்படுத்துவதனூடாகவே தேசத்தின் சமாதானமும் செழுமையும் தனிமனிதர்களினதும் சமூகங்களினதும் கண்ணியமும் சுதந்திரமும் நீடித்த காலத்திற்கு நிலைத்துநிற்கும். இதற்கான ஒரேவழி கல்விதான். 

இதனடிப்படையில் எங்களதும் எங்களது பிள்ளைகளினதும் கற்றற் செயற்பாடுகள் பின்வரும் குறிக்கோள்களை நோக்கியதாக மாற்றி யமைக்கப்பட வேண்டியுள்ளன. 

அ).விரைவான பொருண்மிய செழுமைக்காக உழைக்கக்கூடிய பல்திறன் ஆற்றல்கள் கொண்டவர்களாக எமது உழைப்பாளர்களும் எதிர்காலத் தலைமுறையும் பயிற்றுவிக்கப்படல். 

ஆ).ஒவ்வொரு மனிதனதும் கண்ணியத்தையும் ஆற்றல்களையும் அபிலாசைகளையும் மதித்து அவர்களுக்கு உரிய இடத்தினை வழங்கக்கூடிய, திறந்ததும் ஆரோக்கியமானதும் உத்தரவாதம் நிறைந்ததுமான அரசியல், சமூக மற்றும் பண்பாட்டுச் சூழலினைக் கட்டியெழுப்பும் கூட்டுப்பங்காளராக சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரையும் தயார்ப்படுத்தல். 

இ).தற்போதுள்ள அரசியல் நிர்வாகம், பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகள், நிறுவனங்கள், ஆகியவற்றில் பணியாற்றும் அல்லது பங்கேற்கும் அனைத்துத் தொகுதியினரும், யுத்தத்தின் பாதிப்புகளிலிருந்து எமது சமூகம் துரிதமாகவும் நிதானத்துடனும் பரந்துபட்ட நோக்குடனும் மீள் எழுச்சி பெறுவதற்கு வழிசெய்யும் வகையில், இணைந்து செயற்படுவதற்கு ஏதுவாக தம்மை மாற்றத்திற்கு உட்படுத்த முன்வருதல். 

பெருமைக்குரிய கல்விச்சமூகத்தினரே!
ஒருபுறத்தில் துரிதப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்காக விஞ்ஞானம், வர்த்தகம், தொழிற்றுறை, கணணியும் தகவற்தொழிநுட்பமும், மருத்துவம், பொறியியல், விவசாயம் எனப் பல்கலைக்கழகப் பட்டங்களைக் குறிவைத்தும் வேலைவாய்ப்புகளைக் குறிவைத்தும் உயர் வருமான பதவிநிலைகளைக் குறிவைத்தும் எமது பிள்ளைகளைப் பாடசாலைகளுடாகத் தயார்ப்;படுத்திக் கொண்டிருக்கின்றோம். 

கடந்த சில தசாப்தங்களில் இழந்து போனவற்றை ஒருசில வருடங்களுக்குள் மீளப்பெற ஆவலாக உள்ளோம். ஆனால் இதனைத் தற்போது நடைமுறையிலுள்ளதும் பலவித மட்டுப்பாடுகளினைக் கொண்டதுமான அரசாங்கத்தின் கல்விக் கட்டமைப்பினாலோ அல்லது தேசிய நோக்கங்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்களினாலோ மட்டும் அடைந்து விடமுடியாது. 

எங்களிடமுள்ள ஆசிரிய வளமும் கல்விநிர்வாக ஆளணியும் பல்கலைக்கழகங்களின் புலமையாளர்களும் கூட யுத்தகாலத் தேய்மானத்திற்கு உட்பட்டவர்களாகவும் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்கவும் அவற்றினை வெற்றிகரமாக முகாமை செய்யவும் பயிற்றப்படாதவர்களாகவே உள்ளோம். 

இத்தகைய நிலையில் பொருளாதார அபிவிருத்திக்காக மாணவர்களைத் தயார்ப்படுத்தும் அதேவேளையில் சனநாயக விழுமியங்களை மீளவும் கட்டியெழுப்புவதற்காக அவர்களைப் பயிற்றுவிக்கும் பாரிய பொறுப்பினையும் நாங்கள் அனைவரும் இணைந்து நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளோம். 

பொறியியலாளர்களை, மருத்துவர்களை, விஞ்ஞானிகளை, கணனிவிற்பன்னர்களை, சட்டவாளர்களை, முகாமைத்துவ நிபுணர்களை, தொழின்முயற்சியாளர்களை, உருவாக்கும் அதேவேளையில் சிந்தனையாளர்களை, சமுகத்தலைவர்களை, எதிர்கால அரசியல்வாதிகளை மட்டுமன்றி ஆன்மீக வழிகாட்டிகளையும் கூட உருவாக்குவது எமது தலையாய கடமையாகவுள்ளது. 

இக்கடமையினை முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது வளங்களையும் சிந்தனைகளையும் ஆற்றல்களையும் ஒருங்கிணைக்கவேண்டியுள்ளது. 

எமக்குள் உள்ள பலங்கள் பலவீனங்களை அடையாளங்காண்பதுடன் புறச்சூழலில் எமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களையும் நாம் எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல்களையும் இனங்கண்டு எமது சமூகத்தின் தேவைகளையும் முன்னுரிமைகளையும் நிறைவு செய்வதற்குப் பொருத்தமான வழிகளையும் வளங்களையும் வாய்ப்புக்களையும் கண்டறிந்து செயற்பட வேண்டும். 

எதிர்காலச் சந்தத்தியினரை சம ஆளுமையும் முழுமையுங் கொண்ட குடிமக்களாக உருவாக்குவதன் பொருட்டு அரசியற்தலைவர்களும் அதிகார மற்றும் நிர்வாகபீடங்களில் உள்ளோரும் கல்விச்சமூகமும் பெற்றோரும் சமூகத் தலைவர்களும் பழையமாணவர்களும் புலம்பெயர்சமூகமும் இணைந்ததான செயலணிகள் பாடசாலைகளைச் சார்ந்து அமைக்கப்படவேண்டும். 

தேசியபாடசாலைகளும் வளமும் பலமும் கொண்ட பெரிய பாடசாலைகளும் தங்கள் அயலில் அல்லது கிராமங்களில் சிறிய வளங்குறைந்த பாடசாலைகளின் அபிவிருத்திக்குப் பங்களிக்கவேண்டும். 

புலம்பெயர் சமூகத்தின் கடமை!
எமது தேவைகளும் தெரிவுகளும் முன்னுரிமைகளும் சிறப்புத் தன்மைகளைக் கொண்டவை. அவற்றை வெற்றி கொள்வதற்காக நாம் புதிய அணுகு முறைகளைத் தேடுகின்றோம். 

இங்குள்ள அரசாங்கத்தினதும் நிறுவனங்களினதும் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளுக்காக பாடசாலை இடை விலகியோரையும், தொழிற்பயிற்சி வேண்டுவோரையும், உயர்கல்விக்காக ஏங்குவோரையும் சிறப்புக்கல்வித் தேவைகளுக்காகத துயருடன் காத்திருப்போரையும்; வருடக்கணக்கில் காத்திருக்கச் செய்வதற்கு எங்களில் யாருக்கும் உரிமையில்லை. 

அவர்களுக்குப் பொருத்தமான துறைசார் உயர் கல்வியையும் தொழிலாற்றல் பயிற்சிகளையும் வாழ்க்கை வளப்படுத்தல் பயிற்சிகளையும் உரிய காலத்தினுள் வழங்கி அவர்களை முழுமையடையச் செய்யும் வகையில் எமது தொலைநோக்குப் பார்வை அமைய வேண்டும். 

எனவே புலம்பெயர் சமூகத்தினது புலமையும் உழைப்பும் பெறுமதியான வளங்களும் மனிதவள மேம்பாட்டிற்கான துறைகளுக்குள் அர்ப்பணிக்கப்பட வேண்டும். காலச்சக்கரத்தை எவ்வாறு தடுத்து நிறுத்தி வைக்கமுடியாதோ அதேபோல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மனிதவளம் அழிவுச்சக்தியாக மாறுவதனையும் எம்மால் தடுத்துநிறுத்த முடியாது. 

அவர்களுக்காக செயற்படத்தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் எங்கள் பிள்ளைகளது, இளையோரது அடிப்படை உரிமைகளை நாம் மறுக்கும் மணித்தியாலங்களாகவே இருக்கும். எனவே சமகால சவால்களை இனங்கண்டு கல்வியினூடாக அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலுள்ள ஆளுமையுள்ள சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் அனைவரினதும் தலையாய கடமையாகும்.


நன்றி: 

புதினப் பலகை 

Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger