News Update :
Home » » இலங்கை வரலாற்றில் எவ்வித குற்றச் செயல்களுக்கும் தண்டணை கிடைத்தாக வரலாறு இல்லை.

இலங்கை வரலாற்றில் எவ்வித குற்றச் செயல்களுக்கும் தண்டணை கிடைத்தாக வரலாறு இல்லை.

Penulis : anpusanthosh on Tuesday, July 23, 2013 | 7:49 AM

30 வருடங்கள் கடந்து விட்டன எத்தனையோ உயர்ப்பலிகளையும், உடமைகளை இழந்தும்,

லட்சக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றார்கள். இத்தனை ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தும் எந்தவொரு விடிவும் கிட்டாது தமிழ் தேசம் இருக்கின்றது. தமிழ் மக்களோ அல்லது மற்றையப் பகுதி இனமக்களோ சுயநிர்ணயத்தினை இழந்து தான் வாழ்கின்றார்கள். இலங்கை மக்களை அன்னிய சக்திகளின், உள்நாட்டு ஆட்சியார்களினால் ஆட்டிவிக்கப்படுகின்றார்கள். முழு இலங்கையின் உற்பத்தியே வெளிநாட்டின் சந்தையை நோக்கியதாகவும், வெளிநாட்டவர்களின் பொருளாதார நலனும் உள்நாட்டு மாபியா அரசியல் சக்திகளின் முதலீடுகளுக்கும் உட்பட்டு இருக்கின்ற வேளையில் தான் 30 வருட சிறைக்கொலை, இனக்கலவரம் நினைவில் கொள்ளப்படுகின்றது.
குட்டிமணி, தங்கத்துரை, ஜெயகுலராஜா போன்ற கைதிகள் சிறையில் கொல்லப்பட்டார்கள். முதல்நாள் 25ம் திகதி அன்று 34 தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுகின்றார்கள் பின்னர் 27ம் திகதி அன்று 18 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கைதிகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் நாடு பூராகவும் தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். குறிப்பாக தொழிற்துறைக்குப் போட்டியின் காரணமாக தமிழ் வர்த்தகர் இலக்கு வைக்கப்பட்டார்கள். வர்த்தகத்திற்கு போட்டியாக இருந்தவர்கள் அகற்றும் வேலையில் சிங்கள முதலாளிய சக்திகளும், அவர்களின் பிரதிநிகளான  ஆட்சியாளர்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உடமைகளை சூறையாடினர்.
இந்த வெறியாட்டத்திற்கு இரையாகிய மக்கள் வடக்கு, கிழக்கு என்று அகதிகளாகச் சென்றனர். இந்தியாவின் சிதம்பரக் கப்பல் ஊடாக காங்கேசன்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இலங்கையின் திறந்த பொருளாதாரகக் கொள்கையை அறிமுகப்படுத்திய பிதாமகன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவாகும். அரசவுடமையாக இருந்தவை தனியார் மயமாக்கல், தனியார் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கொடுக்கப்பட்டது, அன்னிய நிறுவனங்களுக்கு சலுகை கொடுக்கப்பட்டது, வேலைத் திண்டாட்டம், கிராமங்களில் இருந்து நகரை நோக்கிய வேலையில்லாதவர்கள்.
இப்படியான நெருக்கடிக்குள் அரசு இருந்த வேளையில் 13 இராணுவத்தின் கொலையை இனவெறிக்கு திசைதிருப்பி விட்டதற்கும், "போர் என்றால் போர்" என்று தனது நாட்டுக் குடியின் மீது போர் தொடுத்தது. அன்றைய ஆட்சியாளர்களையே அந்தப் பொறுப்புச் சேரும்.
ஆனால் சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் இந்த ஈனச் செயலில் பங்காளிகளாக இருக்கவில்லை என்பதை அன்று கொலைவெறியில் இருந்து தப்பிய தமிழ் மக்கள் நினைவு கூருகின்றார்கள்.

இதன் தாக்கத்தில் இருந்து ஒரு இளைஞர் பட்டாளமே ஆயுதம் தூக்கத் தயாராக இருந்தது. அன்று "நான் இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்" என கோரிய குட்டிமணியின் பேச்சே உணர்விற்கு பசலையாக பயன்பட்டது. இந்த உணர்ச்சி வேகத்தை அன்னிய ஆதிக்க சக்தியாக இந்தியா பயன்படுத்தியதையும், அவர்களின் சதிவலைக்குள் விழுந்ததையும் அரசியல் விவேகமற்ற தலைமைகள் தமது அரசியல்வறுமையால் சோரம் போகினர்.
அன்று இந்தியாவின் தயவில் உருவாக போராட்டம் இந்தியவின் உதவியினாலேயே முடிவிற்கு வந்து முள்ளிவாயக்காலில் மரண ஓலத்துடன் முடிவுற்றது.
ஆனாலும் தமது அரசியல் உரிமையை நிலைநிறுத்துவதற்கு தொடர்ச்சியாக போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தமிழ் தேசம் இருக்கின்றது.
மக்களை அணிதிரட்டி போராட ஒரு அமைப்பு இல்லை. இன்றிருக்கும் வெறும் திண்ணைப்பேச்சு அரசியல்வாதிகள் மேற்கு தேசங்களுக்கும், இந்தியாவிற்கும் செல்கின்றரேயன்றி சொந்த மக்களையும் மற்றைய இன மக்களையும் இணைத்து போராட்டம் நடத்த திராணியற்றவர்களாக இருக்கின்றார்கள்..
இலங்கை வரலாற்றில் எவ்வித குற்றச் செயல்களுக்கும் தண்டணை கிடைத்தாக வரலாறு இல்லை. 1972, 1983, 1989 இந்தக் காலத்தில் நடைபெற்ற கொலைகளை, காணாமலாக்கல், அழித்தொழிப்புகள் எவற்றிற்கும் தீர்வு கிட்டவில்லை. இவ்வாறு காணமாலாக்கப்பட்டவர்களின் எலும்புக் கூடுகள் இப்போ கிடைத்தவண்ணம் உள்ளது.
சட்டவரம்பினுள் தீர்வைக் கண்டுவிட முடியும் என்றும், தீர்வுகள் முன்வைக்கப்படாத தெரிவுக்குழுவிற்குள் வா என்று கூறும் அரசின் போலி முகத்தை சகோதர சிங்கள மக்களுக்கு எடுத்துச் செல்லும் கடமையைக் கூட செய்ய முடியாதவர்களாக உள்ளார்கள்.
குலச்சமூகத்தின் எச்சமாகிய பழிக்குப்பழி என்ற சிந்தனையில் உருவாகிய கொலைவெறி என்பது முழு நாட்டிற்கும் கரிநாளே. முதலாளிய பொருளாதார உறவிற்கு வரமுடியாத நிலையில் இருந்த ஒரு சமூகப்பிரிவை வைத்துக் கொண்டு கொலைவெறியாட்டத்தினை நடத்தியது இலங்கை ஆழும் வர்க்கமே. ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் இந்த கொலைவெறியை எதிர்த்துத்தான் வந்துள்ளார்கள்.
கடந்த காலத்தினை இட்டு இழவு கொண்டாடுவதையும், கடந்த காலத்தினை உணர்ச்சிக்காக பயன்படுத்துவதையும் விட்டு அதில் இருந்து வெளிவரவேண்டும். இந்தச் சமூகத்தின் அவலத்தினை போக்கும்படியான சிந்தனையை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமையுண்டு. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் அறிக்கையிலும், தேர்தலிலும், ஆணைக்குழுக்களிலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திப்பதிலேயே காலத்தினை செலவழிக்கின்றார்கள்.

மக்களுக்கான பிரச்சினை அனைத்து இனமக்களிடம் கொண்டு செல்லும் படியான மாற்றுத்திட்டம் இல்லாது சம்பிரதாய கனவான் அரசியலை மேற்கொள்கின்றார்கள். புதிய சமூகச் சிந்தனையை, புதிய நோக்கில் கடந்த காலத்தில் இருந்து மீளும் வேலைமுறைகளுக்கான திட்டத்தினை முன்வைத்து போராட வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கின்றது.
Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger